பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள மரின்ஸ்கி அரண்மனையில் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வேளாண்மை, உணவு தொழிற்சாலை, மருத்துவம் மற்றும் கலாசாரம் ஆகிய நான்கு துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம், பொருளாதார விவகாரம், மருந்து தொழிற்சாலை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறினார்.
மேலும், ரஷ்யா- உக்ரைன் போருக்கு தீர்வு காண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும், ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனையின்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்தியா தரப்பில் அதிநவீன மருந்து பெட்டகங்கள் உக்ரைனுக்கு உதவியாக வழங்கப்பட்டன.