கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான் – 3 வெற்றிகரமாக தனது விக்ரம் லேண்டரை, நிலவில் தரையிறக்கிய தினம், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
சந்திரயான் – 3 வெற்றியால் விண்வெளித்துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விக்ரம் லேண்டரை, கடந்த ஆண்டு இதே நாள் நிலவின் தெற்குப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.
இதன் மூலம் உலகிலேயே இந்தியா தான் நிலவின் தென்துருவத்தில் கால்வைத்த முதல் நாடு, மற்றும் நிலவில் கால் வைத்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
சந்திரயான் – 3, வெற்றியும் அதனை கொண்டாடும் இந்த தேசிய விண்வெளி தினமும் , இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருளாக ‘நிலவைத்தொடும் வேளையில், வாழ்வைத் தொடுவது – இந்தியாவின் விண்வெளி சரித்திரம்’ என அமைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியாவின் திறமையை வெளிப்படுத்திய சந்திரயான் – 3, திட்டம், விடாமுயற்சி, துல்லியமான அணுகுமுறை என்பதன் எடுத்துக்காட்டாக உள்ளது.
நிலவின் தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை மிக அதிகமாக குறைகிறது என்பதை ரோவர் கண்டறிந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி நிலவின் மேற்பரப்பு 50 டிகிரி செல்சியஸ்ஸாகவும், 2 செமீ ஆழத்தில் 30 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், 6 செமீ ஆழத்தில் 0 முதல் -10 டிகிரி செல்சியஸாகவும் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் நிலவில் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. மேலும் பகுப்பாய்வில் மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் டைட்டேனியம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.
மேலும் உருகிய பாறைகளின் கடல் சந்திரனின் தென் துருவத்தை மூடியது, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்ற கண்டுபிடிப்பு, சந்திரனின் புவியியல் வரலாற்றைப் பற்றிய புதிய பரிமாணமாக கருதப்படுகிறது.
சந்திரயான்-3 இல் தொடங்கிய பயணம், 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை நிறுவுவது மற்றும் 2040ஆம் ஆண்டு முதல் இந்தியர் நிலவில் தரையிறங்குவது உள்ளிட்ட பல லட்சிய இலக்குகளை வைத்திருக்கிறது.
2022ம் ஆண்டு தேசிய புவியியல் கொள்கை, 2023ம் ஆண்டில் புதிய விண்வெளிக் கொள்கை மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் திருத்தங்கள் போன்ற மத்திய அரசின் முக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் விண்வெளி துறைக்கு செய்த பெரும் உதவியாகும்.
2024ம் ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளித்துறைக்கு 1000 கோடி ரூபாய்க்கான மூலதன நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மேலும் விரிவான புவி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான பொதுதுறையுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்த செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்திய தேசிய விண்வெளி தினம், வரும் தலைமுறையை அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கவும் இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு பங்களிக்கவும் உறுதுணையாக இருக்க வழி காட்டுகிறது.