நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரகூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் – வாசுகி என்ற தம்பதியினரின் 16 வயது மகன் பயின்று வந்துள்ளார். இவர் வழக்கம் போல வகுப்பறையில் இருந்தபோது சக மாணவன் ஒருவர் அவருடைய காலணியை எடுத்து மறைத்துவைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் ரமேஷின் மகன் வகுப்பறையிலேயே மயக்கமடைந்தார். இதையறிந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.