நடைமுறைக்குப் பொருந்தாத நூற்றுக்கணக்கான காலனித்துவ சட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் பங்கேற்ற அவர், நீதி பரிபாலனம் என்பது எளிமையாகவும், தெளிவாகவும் இருந்தாலும் அதற்கான நடைமுறை கடினமானது என தெரிவித்தார்.
நீதி பரிபாலனத்தை இலகுவாக்க தேசம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது தனக்கு திருப்தியளிப்பதாக கூறிய பிரதமர் மோடி, நடைமுறைக்கு ஒத்துவராத நூற்றுக்கணக்கான சட்டங்கள் ஒழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
நாடு விடுதலை பெற்று பல தசாப்தங்களுக்கு பின்னர், அடிமை மனோபாவத்திலிருந்து விடுபட்டு, இந்திய குற்றவியல் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் இயற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பேசிய அவர், பத்தாண்டுக்கு முன் சர்வதேச அளவில் 10-ஆவது பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியதாக கூறினார்.
இன்றைக்கு தேசத்தின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியது என்றும், நவீன வளர்ச்சிக்கு ஏதுவாக புதுமைகளை புகுத்துவது அவசியம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.