செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான சுங்கக்கட்டண உயர்வு மிகவும் அதிகம் என தெரிவித்துள்ள அன்புமணி, சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 40 சதவீதம் பராமரிப்புக்காக செலவிடப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, வரும் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமெனவும் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.