ஆயிரத்து 500 பழைய பேருந்துகளில் ஆயிரத்து 64 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
புதிய அரசு பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக தமிழக அரசு போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 2022-23 ஆண்டில், ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கி, 833 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ள 167 பேருந்துகள் 2024 நவம்பருக்கு பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ல் 888 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள 120 பேருந்து நவம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. 2024-25 ஆண்டில் 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்ய ஆயிரத்து 535 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 2 ஆயிரத்து 544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
500 மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்த புள்ளி தயார் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியுடன் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கும் 500 பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்து 500 பழைய பேருந்துகளில் ஆயிரத்து 64 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.