சென்னை ராயபேட்டையில் பெண் காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
வி.எம். தெருவில் அமைந்துள்ள முட்டி கன்னியம் கோவிலில், நிர்வாகம் சார்பில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதால் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட சில இளைஞர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த பெண் காவலர் கௌசல்யா, இளைஞர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் காவலரின் கையில் பிளேடால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த அஜய், கிஷோர், சசி, ஸ்ரீதர் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.