நாசிக்கில் பெய்துவரும் கனமழையால் கங்காபூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
கங்காபூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி கோதாவரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், கோதாவரி ஆற்றங்கரையோரங்களின் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோதாவரி ஆற்றின் மைய பகுதியில் உள்ள கோயில்களில் வெள்ளம் புகுந்து கரைபுரண்டு ஓடுகிறது.