ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி, பணவீக்கத்தை சரி செய்தல் மற்றும் பிற சலுகைகளுடன், கடைசி 12 மாத சராசரி ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிந்தோருக்கு இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்தின. அடுத்த சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.