ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் 6 எம்.எல்.ஏ.க்களுடன் வரும் 30-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதால், சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்து முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அதிருப்தியில் இருந்து வந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர், 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்ட அவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, வரும் 30-ஆம் தேதி சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது.