ரிலையன்ஸ்- டிஸ்னி இந்தியா நிறுவனங்கள் இணைவதற்கு தேசிய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் துணை நிறுவனங்களான வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகியவை டிஸ்னி இந்தியா நிறுவனத்தை தங்களுடன் இணைத்து, நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் சேவையை தொடங்கப் போவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தன.
70 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சோனி, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் 47-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், டிஸ்னி இந்தியா குழுமத்துடன் அந்நிறுவனம் இணைவதற்கு தேசிய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரு நிறுவனங்களும் இணைந்த பின்னர், அதன் தலைவராக நீடா அம்பானியும், துணைத் தலைவராக வால்ட் டிஸ்னி முன்னாள் செயலர் உதய் சங்கரும் செயல்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
நிறுவன மேலாண்மைக் குழுவில் ரிலையன்ஸ் சார்பில் ஐந்து பேர், டிஸ்னி சார்பில் 3 பேர், 2 சுயேச்சை இயக்குநர்கள் என மொத்தம் 10 பேர் அங்கம் வகிப்பர் என்றும், நிகழாண்டின் இறுதி காலாண்டில் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருநிறுவனங்களும் அதிகாரபூர்வமாக இணையும் என்றும் ரிலையன்ஸ் குழும வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக உருவாகும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.34 சதவீத பங்குகளும், வியாகாம் 18 நிறுவனம் 46.82 சதவீத பங்குகளும், டிஸ்னி இந்தியா நிறுவனம் 36.84 சதவீத பங்குகளும் வைத்திருக்கும் என்றும், நிறுவன மேம்பாட்டுக்காக ரிலையன்ஸ் நிறுவனம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. (OUT)