அடுத்த 10 ஆண்டுகளில் 9 முதல் 5 மணி வரையிலான வேலைகள் இருக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொன்னாலும் கூட இன்று எல்லாத் துறைகளிலும் பெண்களும் பனி புரிகின்றனர். எல்லா வகையிலும் வேலை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏற்கெனவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வருகையால், குறைந்த திறன் உடைய வேலைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் தான், LinkedIn சமூக ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனரான Reid Hoffman, 2034 ஆம் ஆண்டுக்குள் காலை 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகள் இல்லாமல் போகும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேட் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற அரசின் முயற்சிகளால், புதிய புதிய தொழில்துறைகள்,வேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் கிக் பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் பெரும் பங்களித்து வருகிறது.
தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் Gen Z தொழிலாளர்கள் இதனை நோக்கி ஆர்வத்துடன் செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
மேலும் அழுத்தமான வேலை நேரங்கள் ஊழியர்களின் வேலைத் திறனைப் பாதிப்பதாகவும், Flextime உற்பத்தித்திறனை அதிகம் மேம்படுத்துவதாகவும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாரம்பரியமான வேலை நேரங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று மனிதவள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தித் துறை,சில்லறை விற்பனை, வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகளில் சில பணியிடங்களுக்கான தேவை இனி இருக்காது. மேலும் வளர்ந்து வரும் புதிய தொழில் துறைகளான மென்பொருள் தொழில் நுட்பம் , இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பணி அழுத்தங்களுக்கு நடுவிலும் ஒரு உணர்வு பூர்வமான பணியாளர்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தி வளர்த்தெடுக்கவும் 9 முதல் 5 மணி வரையிலான வேலை நேரம் இன்றியமையாதது என்று கூறும் சமூகவியல் ஆய்வாளர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பாரம்பரியமான வேலை நேரம் தான் பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்வதால், வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை உருவாக்கும் எனக் கருதப்பட்டாலும், நீண்ட வேலை நேரத்தால் , அதிருப்தி, சோர்வு என உளவியல் ரீதியான ஆபத்தான உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.