சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தய நிகழ்வு நாளை முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பாடலும் வெளியான நிலையில், கார் பந்தயம் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல், ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவானந்த சாலை மற்றும் கொடி மர சாலை முற்றிலும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.