தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மீரட்-லக்னோ இடையேயான ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
அதேசமயம், சென்னை சென்ட்ரலில் இருந்து தமிழிக ஆளுநர் ஆா்.என் ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோா் எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.