பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற பவள விழாவையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு தபால் தலையையும், நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து, மாவட்ட நீதித்துறையின் 2 நாள் தேசிய மாநாட்டை அவர் தொடங்கிவைத்தார். பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசியலமைப்பு மீதான நமது நம்பிக்கையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்வதாக கூறினார். அவசரநிலை போன்ற இருண்ட காலகட்டத்தில் நமது அடிப்படை உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாத்ததாக கூறிய பிரதமர் மோடி, தேசத்தின் நலன் கேள்விக்குறியாகும் போது, அதன் பாதுகாப்பு அரணாக நீதித்துறை திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.
மேலும் நீதித்துறை வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் எட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
முன்னதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசுகையில், மாவட்ட நீதிமன்றங்களை துணை நீதித்துறையாக கருதும் காலனித்துவ மனோபாவத்தை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.