உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், ஓநாய்களை தேடும் பணியை அம்மாநில வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய- நேபாள எல்லையில் அமைந்துள்ளது பஹ்ரைச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தில் மஹ்சி என்னும் பகுதியில், சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 30 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் தான் ஓநாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்தப் பகுதியில் எவ்வளவு ஓநாய்கள் உள்ளன என்ற விவரம் தெரியவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 45 நாட்களில் ஆறு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஏழு பேரை ஓநாய்கள் கடித்து கொன்றுள்ளன. 26க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊருக்குள் வந்து மக்களைக் கொல்லும் ஓநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு உத்தரப்பிரதேச வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்று பெயர் வைத்திருக்கிறது. ஓநாய்கள் கூட்டத்தைப் பிடிக்க வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த பணியில் வனத்துறையின் ஒன்பது குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இதுவரை மூன்று ஓநாய்கள் மட்டுமே பிடிபட்டுள்ளன. ஓநாய்களை பிடிக்க 16 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாவட்ட அளவிலான 12 அதிகாரிகள் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள ஓநாய்களைப் பிடிக்கும் வரை கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் களத்திலேயே இருப்பார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஓநாய்கள் சுற்றித் திரியும் பகுதிகளில் நான்கு கூண்டுகள் மற்றும் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓநாய் கூட்டத்தை கண்காணிக்க அதிக அதிர்வெண் கொண்ட ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தெர்மல் ட்ரோன்களை வனத்துறையினர் ஓநாய்களைப் பிடிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
ஓநாய்கள் குறித்து கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஓநாய்களை கண்டால் அவற்றை விரட்ட பட்டாசுகளும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுடன் குடும்பமாக திறந்தவெளியில் துாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேச வனத்துறை அமைச்சர் அருண் குமார் சக்சேனா, மனித உயிரிழப்பை தடுக்க, பதற்றம் உள்ள கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற பகுதிகளைப் பற்றி கூகுள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
காக்ரா நதியிடவ ஒவ்வொரு ஆண்டும் கடும் வெள்ளம் ஏற்படுகிறது இதன்காரணமாக, ஓநாய்களின் குகைகளில் தண்ணீர் நிரம்பிவிடுகிறது. அதனால் ஓநாய்கள் குகைகளை விட்டு அருகில் உள்ள கிராமங்களுக்குள் வந்து விடுகின்றன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்,உத்தரப் பிரதேசத்தின் கோண்டா, பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் ஓநாய்கள் சுமார் 32 குழந்தைகளைக் கொன்றுள்ளன.
சர்வதேச ஓநாய் மையத்தின் அறிக்கை, இமயமலையின் அடிவாரத்தில் 1100 ஓநாய்கள் வாழ்கின்றன என்றும், இந்தியாவில் மொத்தம் 6000 ஓநாய்கள் வாழ்கின்றன என்றும் தெரிவிக்கிறது.
லைவ் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996-97 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஓநாய்கள் 74 பேரைக் கொன்றுள்ளன என்றும், அதில் பெரும்பாலோனோர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 1878ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 624 பேரை ஓநாய்கள் கொன்றுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.