இரண்டாவது அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல் ‘ ஐஎன்எஸ் அரிகாட் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அரிஹந்தை காட்டிலும் பன்மடங்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்த ஐஎன்எஸ் அரிகாட் உருவாக்கப் பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இன்றைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், ஒவ்வொரு துறையிலும் நாடு வேகமாக வளர்ச்சியடைவது மட்டும் போதாது. நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் முன்னேறுவது அவசியமாகும். வளர்ந்த பொருளாதாரம் என்பதோடு வலிமையான ராணுவமும் தேவைப் படுகிறது.
அந்த வகையில், உள்நாட்டிலேயே உயர்தர ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
பாதுகாப்பிலும் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு, 2018ம் ஆண்டு ஐஎன்எஸ் அரிஹந்த் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இப்போது ஐஎன்எஸ் அரிகாட் இணைக்கப்பட்டுள்ளது. வட மொழியில் அரிஹந்த் என்றால் எதிரியை அழிப்பவன் என்று பொருளாகும்.
இந்த ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பல், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் படைத்ததாகும். மேலும் அணுசக்தியில் இயங்கும் நாட்டின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையால் நிலத்தில் இருந்தும் விண்ணில் இருந்தும் மற்றும் கடலில் இருந்தும் அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறனை இதன் மூலம் இந்தியா பெற்றுள்ளது.
ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 112 மீட்டர் நீளமுடையதாகும். 6,000 டன்கள் எடையுள்ள ஐஎன்எஸ் அரிகாட், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தாங்கக் கூடிய திறன் கொண்டதாகும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் நான்கு ஏவுகணைக் குழாய்கள் உள்ளன. 750 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் பன்னிரண்டு K-15 ஏவுகணைகளைச் செலுத்தும் வசதி உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 3,500 கிலோமீட்டருக்குப் மேல் சென்று தாக்கும் நான்கு அணு ஆயுதம் கொண்ட K-4 ஏவுகணைகளைச் செலுத்த கூடிய திறன் படைத்ததாகும்.
நீரில் மூழ்கிய நிலையில், அதிகபட்சமாக மணிக்கு 24 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியது. கடலின் மேற்பரப்பில் 12–15 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியதாகும் .
வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள், காற்று மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கு அடிக்கடி கடலின் மேற்பரப்புக்கு வரவேண்டியதிருக்கும். ஆனால், அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பல் நீண்ட நேரத்துக்கு நீருக்கடியிலேயே இருக்கமுடியும்.
ஐஎன்எஸ் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் மேம்பட்ட தொழில்நுட்பக் கப்பல் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை, மற்றும் டிஆர்டிஓ இணைந்து உருவாக்கியுள்ளன. மொத்தம் ஐந்து நீர்மூழ்கி கப்பல்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் அரிதாமன் என்று பெயரிடப்பட்ட மூன்றாவது கப்பல், 7,000 டன் எடையுள்ள பெரிய நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகிய இரண்டும் இருப்பது, எதிரிகளைத் தடுக்கவும், தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் இந்தியாவின் இராணுவத் திறனை திறனை மேம்படுத்தவும் பயன்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சீனாவிடம், 10,000 கிலோமீட்டர் சென்று தாக்கக் கூடிய JL-3 ஏவுகணைகளுடன் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்பதும், அமெரிக்காவிடம் அணுசக்தியில் இயங்கும் 14 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.