டாடாவின் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்பு பேச்சுவார்த்தை 18 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசிடமிருந்து இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், இந்திய விமான நிறுவனம் ஒன்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பங்குகளை வாங்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாறுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமம், அரசின் ஏர் இந்தியா குழுமத்தைக் வாங்கி, JRD டாடா காலத்திற்கு பின்பு மீண்டும் விமான சேவைத்துறையில் இறங்கியது.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இந்த நான்கு விமான நிறுவனங்களையும் டாடா குழுமம் இயக்கி வந்தது.
ஒரு கட்டத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்ஆசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, குறைந்த விலை விமான சேவையை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது.
அதே சமயம், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகியவை இணைந்து முழு சேவை நிறுவனமாக இயங்கி வந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறது. அதேசமயம் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கிறது.
தற்போது மத்திய அரசின் முதலீட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் 25.1 சதவீத பங்குகளை 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு முடிந்த பிறகு 675.42 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் பயணச் சந்தைகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் காலூன்றுகிறது. மேலும் சிறிய உள்நாட்டு சந்தைக்கு அப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன சிறகை விரிக்கிறது என்கிறார்கள் வணிக வல்லுநர்கள்.
கடந்த நிதியாண்டில் சுமார் 15,532 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த டாடா விமான போக்குவரத்து துறை, அதிகமான லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏர் இந்தியாவுடன் இணைந்ததை அடுத்து, அனைத்து விஸ்தாரா விமானங்களும் ஏர் இந்தியாவால் இயக்கப்பட உள்ளன. மேலும், தனது கடைசி விமானத்தை விஸ்தாரா வரும் நவம்பர் 11 ஆம் தேதி இயக்கும் என்றும் தெரிகிறது.
எனவே நவம்பர் 12 ஆம் தேதிக்கு பிறகு பயண முன்பதிவுகளை வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல், வாடிக்கையாளர்கள் விஸ்தாராவில் செய்ய முடியாது என்றும், விமானங்கள் இயக்கப்படும் வழிகளுக்கான முன்பதிவுகள் ஏர் இந்தியாவின் இணையதளத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.
விஸ்தாராவும் ஏர் இந்தியாவும் சீரான, தொந்தரவில்லாத விமானச் சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக விஸ்தாராவின் தலைமை செயல் அதிகாரி வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் கூடுதல் விமான விருப்பங்களை நிறைவேற்ற காத்திருப்பதாகவும், உலகத் தரம் வாய்ந்த, பயண அனுபவத்தை வழங்க இருப்பதாக ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் உறுதியளித்திருக்கிறார்.
இதற்கிடையே, மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் கருடா ஏர்லைன்ஸ் உடன் கூட்டு ஒப்பந்தங்களை முடித்துள்ள ஏர் இந்தியா, ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.