ஃபார்முலா 4 கார் பந்தயம் விபத்துக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று காலை முதல் தகுதிச்சுற்று போட்டிகள் மற்றும் மதியம் முதல் இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் 2ம் சுற்று பந்தயங்களான, இந்தியன் ரேஸிங் லீக், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகியவை மற்றும் கூடுதலாக JK டயர்ஸ் LGF உள்ளிட்ட பந்தயங்கள் நடத்தப்பட்டன.
முதலில் நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஆஸ்திரேலிய வீரர் பார்டர் கொச்சி முதலிடத்தையும், இந்திய வீரர் ருஹான் அல்வா, அபை மோஹன் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் சாம்பியன்ஷிப்பின் 2வது பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் அலிபாய்-சௌத்திரி முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை இந்திய வீரர் திவி நந்தன் மற்றும் 3-வது இடத்தை இந்திய வீரர் ஜேடன் பாரியர்ட் கைபற்றினர்.
பின்னர் நடைபெற்ற இந்தியன் ரேஸிங் லீக் முதல் பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் ராவுள் ஹய்முன் முதலாம் இடத்தை பெற்றார். 2-வது இடத்தை செக் குடியரசின் கேபிரிலா மற்றும் 3-வது இடத்தை மலேசியாவை சேர்ந்த அலிஸ்டர் ஆகியோர் கைபற்றினர். அடுத்ததாக ரேசிங் லீக் இரண்டாவது கார் பந்தயத்தில் போர்ச்சுக்கலின் ஆல்வெரோ முதலிடத்தையும், இந்தியாவின் சுனில் ஷா, ரிஷான் ராஜிவ் ஆகியோர் முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை கைபற்றினர்.
இதனையடுத்து ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டி விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த டார்க் டான் அணி வீரர் டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.