வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க 2 ஆயிரத்து 817 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஏழு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக கூறினார்.
முதலாவதாக டிஜிட்டல் வேளாண் இயக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், வேளாண் பொது உள்கட்டமைப்பு திட்ட வரிசையில் அந்த இயக்கம் மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
வேளாண் துறை மேம்பாட்டுக்காக 2 ஆயிரத்து 817 கோடி ரூபாய் முதலீட்டுடன், டிஜிட்டல் வேளாண் இயக்கம் தொடங்கப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 3 ஆயிரத்து 979 கோடி ரூபாய் முதலீட்டில், பருப்பு வகை பயிர்கள், எண்ணெய் வித்துகளின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.