திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மொத்த வியாபார கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரான ஜான் ஜூடி மெயிலின் மகளான ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில், தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆன்லைனில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி அதை சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சைனீஸ் நூடுல்ஸ் விற்பனை செய்யும் மொத்த வியாபார கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து, மொத்த வியாபார கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.