வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் விநாயகரின் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. விநாயகர் சிலைகள் தயாரிப்பு குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது விநாயகர் சதூர்த்தி. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களில் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கான விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ கரைப்பது வழக்கமாக இருக்கிறது.
விநாயகர் சதூர்த்தி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமடைந்துள்ளது.
சென்னை புரசைவாக்கம், கொசப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள், சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன, நீர் நிலைகளில் மாசுக்கள் ஏற்படாத வகையிலும், எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன
ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதூர்த்தியின் போதும் சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், விநாயகரின் அருளால் அதிகளவில் சிலைகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது