வெளிநாட்டில் விற்க முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால், போலீசார் மீட்டனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர் பெயரில், காளிங்கன் எனப்படும் கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர், பல்வேறு நாடுகளிலிருந்து பழங்கால சிலைகளை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில், சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கு இந்த சிலை விற்பனை செய்ய செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த சிலையை கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் சுபாஷின் கூட்டாளிகள் தமிழகத்திலிருந்து திருடி விற்றதும் தெரியவந்தது. இந்த சிலையை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சக்கத்தின் உதவியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நாடினர்.
அதைத்தொடர்ந்து தாய்லாந்து அரசிடமிருந்து குழந்தை வடிவ கிருஷ்ணர் சிலையானது நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.