விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஓட்டுநர் காளிக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை தடுக்க முயன்றபெண் டி.எஸ்.பி காயத்ரியை போராட்டக்காரர்கள் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான முருகேசன் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தொப்பலாக்கரை பகுதியில் பதுங்கி இருந்த முருகேசனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கீழே விழுந்ததில் வலது கையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.