விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்துசெய்தியில் தெரிவித்துள்ளதாவது : “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நினைத்த காரியத்தை நடத்தித் தரும் விநாயகப் பெருமானை வணங்கி, எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பது நமது நெடுங்கால நம்பிக்கை. நமது பாரத நாட்டில் நடைபெறுகின்ற திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களிடையே இருக்கின்ற பாகுபாடுகளை நீக்கி அனைவரையும் ஒருங்கிணைக்கின்றன.
சுதந்திரப் போராட்ட பெரும் வீரர், அய்யா பாலகங்காதர திலகர் தலைமையில் மக்கள் சுதந்திர எழுச்சி பெற்று, ஆங்கிலேயர்களை விரட்டிட அடிகோலிய பெருவிழாவாக, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
இந்து முன்னணி அமைப்பை நிறுவிய, மறைந்த அய்யா இராமகோபாலன் அவர்களும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை சமுதாய ஒற்றுமைப் பெருவிழாவாக வார்த்தெடுத்தார்கள். அந்த வகையில், நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும் பாதுகாத்து வரும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி விழா திகழ்ந்து வருகிறது.
இந்த அற்புதமான நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, அமைதி மற்றும் ஆரோக்கியம் நிலைத்திடவும், நாட்டின் நலமும் வளமும் பெருகி, ஒற்றுமை ஓங்கிடவும் கடவுளிடம் வேண்டுகிறேன். மேலும், வரும் காலங்களில் நமது முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி வெற்றி அமைந்து மகிழ்வோடு வாழ, இந்த விழாவானது அனைவருக்கும் உந்து சக்தியாகத் திகழட்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.