சென்னையில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும். பின்னர் காவல்துறை அறிவித்துள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தும் வரப்படும்.
இது தவிர அனைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடு செய்யவும், பொது இடங்களில் முறையான அனுமதியுடன் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு. உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடு செய்யவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,