மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மகா விஷ்ணு மீது பல்வேறு அமைப்புகள் சார்பில், பெருநகர சென்னை காவல் ஆணையாளர் மற்றும் திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரை கைது செய்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செய்தியாளர்கள் காத்திருந்த வழியில் மகாவிஷ்ணுவை அழைத்து செல்லாமல் வேறு வழியில் போலீசார் மகா விஷ்ணுவை அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, தம்மை போன்ற பலருக்கும் மகாவிஷ்ணு வாழ்க்கை கொடுத்துள்ளார் எனவும், “மகா விஷ்ணுவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரை ஏதாவது செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.