உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகி வரும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிகாலம் 2026-ம் ஆண்டில் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிகாலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மும்முரம் காட்டி வரும் மாநிலதேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில், உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து வகையான வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தற்போதைய நிலை, தரம் குறித்து ஆய்வு செய்து இயந்திரங்களை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த சுற்றறிக்கையால், கடந்த 2022-ம் ஆண்டில் பொறுப்பேற்ற பிரதிநிதிகளின் பதவிகள் கலைக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இன்னும் 2 ஆண்டு பதவிகாலம் உள்ள நிலையில் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் பதவு பறிபோகும் நிலை ஏற்படும் என பிரதிநிதகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.