உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்த சில வாரங்களில் உக்ரைன் சென்று போர் நிறுத்தத்துக்கு முன்வருமாறு அந்நாட்டு அதிபர் ஜெலென்கியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பின்னர், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு உக்ரைன் பயண அனுபவத்தை பிரதமர் மோடி விவரித்தார். இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என புதின் அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா சென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.