தமிழ் திரைப்பட இயக்குநர் தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்ததாக நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் அடிமையாக பயன்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் தாம் வசித்தபோது தன்னுடைய 18-ஆவது வயதில், கல்லூரி முதலாமாண்டு படித்த சமயத்தில் நடிகை ரேவதியால் ஈர்க்கப்பட்டு தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததாகவும்,
அப்போது திரைப்பட இயக்குநர் ஒருவர் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று மகளைப் போல ஆரம்பத்தில் பாவித்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர், அவர் தன்னை ஓராண்டு காலம் பாலியல் அடிமையாக வைத்திருந்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்ததாகவும் அந்த நடிகை தெரிவித்துள்ளார்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு தனக்கு 30 ஆண்டுகள் ஆனதாக கூறிய அவர், சம்பந்தப்பட்ட இயக்குநரின் பெயரை சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.