சிவகங்கை மாவட்ட மைதானத்தை சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் அரவிந்த மேனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை உடல் உழைப்புக்காக பயன்படுத்திய சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், மைதானத்தை சீர்செய்யவும் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை என சாடியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களை கனமான மின்கம்பங்களைச் சுமக்க வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்போது, இந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது என வினவியுள்ளார்.
இதுபோன்ற விதிமீறல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தடுக்க முடியவில்லை என்றால், ஏன் அவர் முக்கியமான துறையில் பதவி வகிக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.