இந்தியாவின் குறைக்கடத்தி துறை வெற்றியின் விளிம்பில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் செமிகான் இந்தியா 2024 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலகளாவிய நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறையை இயக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக தெரிவித்தார்.
செமிகண்டக்டர் தயாரிப்பில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், செமிகண்டக்டர் துறைக்கான ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா வழங்குகிறது என குறிப்பிட்டார்.
மேலும், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையானது செமிகண்டக்டர் என்றும், நமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட செமிகண்டக்டர் தொழில் அடித்தளமாக இருக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.