மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சர்ச்சைக்குரிய பெண்கள் தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடங்கியது.
மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே கட்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் பெண்கள் விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மதுரையில் பணியாற்றி வந்த பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு ஆசிரியைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து, விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் விடுதி கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. முன்னதாக, தீ விபத்துக்கு காரணமான குளிர்சாதனப் பெட்டியின் மாதிரிகளை ஆய்வுக்காக தடயவியல் நிபுணர்கள் எடுத்துச் சென்றனர்.