கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, அதிக பட்சமாக 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்ட்ரா தான். மும்பையில் 2,000க்கும் மேற்பட்ட சர்வஜனக் கணபதி மண்டலங்கள் உள்ளன. எனினும், கவுட் சரஸ்வத் பிராமின் என்ற ஜிஎஸ்பி சேவா மண்டலின் மகாகணபதி, மும்பையின் கிங்ஸ் சர்க்கிளில் உள்ள இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலை என்று அழைக்கப்படுகிறார்.
66 கிலோவுக்கும் மேலான தங்க ஆபரணங்கள், 325 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களால் இந்த விநாயகர் அலங்கார விநாயகராக விளங்குகிறார்.
எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய இந்த விநாயகரை பக்தர்கள் நவசலா பாவனாரா விஸ்வாச்சா ராஜா என்று போற்றுகிறார்கள்.
ஜிஎஸ்பி சேவா மண்டலத்தில், இந்த ஆண்டு, மகாகணபதியின் 70வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.
மகாகணபதியின் ஒவ்வொரு பக்தரையும் பாதுகாப்பது முதன்மையான பொறுப்பு என்ற அடிப்படையில், சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 360.40 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு செய்திருந்தார்கள்.
அதுவே இந்த ஆண்டு, 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளனர் இந்த ஜிஎஸ்பி சேவா மண்டலத்தினர்.
திருவிழாக் காப்பீடு என்பது பொதுவாக விநாயகப் பெருமானின் சிலையை அலங்கரிக்கும் தங்க ஆபரணங்கள், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய அபாயங்கள் போன்ற அம்சங்களுக்கான உள்ளடக்கியதாகும்.
தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை உள்ளடக்கிய பல்வேறு ஆபத்துக்களுக்கு 43.15 கோடி ரூபாய்க்கு அனைத்து இடர் காப்பீடும், பூகம்ப அபாயத்துடன் கூடிய ஃபர்னிச்சர், ஃபிக்சர்ஸ் & ஃபிட்டிங்ஸ், கம்ப்யூட்டர்கள், CCTV கேமராக்கள், QR ஸ்கேனர்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றுக்கு 2 கோடி ரூபாய்க்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பந்தல்கள், மைதானங்கள், பக்தர்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொது பாதுகாப்புக்கு 30 கோடி ரூபாய்க்கான காப்பீடும், தன்னார்வலர்கள், அர்ச்சகர்கள், சமையல்காரர்கள், தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள் போன்றவர்களுக்கு 325 கோடி ரூபாய்க்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளன.
இதனுடன், விநாயகர் அமைக்கப்பட்ட வளாகத்திற்கான நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக்களுக்காக 43 லட்சத்துக்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.
வங்கி லாக்கர்களில் இருந்து பந்தலுக்கு தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது முதல் பண்டிகை முடிந்து வங்கிக்குத் திரும்பும் வரையிலான முழு காலகட்டத்திற்கும் பிரீமியம் கணக்கிடப்படுகிறது என்று சொல்லப் பட்டாலும் பிரீமியம் தொகை எவ்வளவு என்பது வெளியிடப் படவில்லை.
2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த பணக்கார விநாயகர் மண்டலிக்கான காப்பீடு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் GSB சேவா மண்டலின் இன்சூரன்ஸ் பிரீமியம் வெறும் 5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் மண்டலியின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி போன்ற திருவிழாக்கான காப்பீடு விஷயத்தில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் OIC போன்ற அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.
சில நாட்களே இந்த திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்பதால் பெரிய லாபம் வராது என்று காரணத்தால் தனியார் காப்பீட்டாளர்கள் இந்தத் துறையைத் தவிர்க்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.