சென்னை உள்பட தமிழக முழுவதும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், மலையாள மக்கள் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையை ஒட்டி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஶ்ரீ வேலி பூஜை நடைபெற்றது.
திருவோணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். கேரளா – தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் மற்றும் குழித்துறை பகுதியில் திருவோணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழித்துறை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்பட பெண்கள் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
இதேபோல், சேலம் குரங்குசாவடி சாஸ்தா நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில், மலையாள மொழி பேசும் கேரள மக்கள் ஒன்று திரண்டு அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, கேரள உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டது. இதேபோல், அம்மாபேட்டை உள்ள குருவாயூரப்பன் கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஐயப்பா பஜனை மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.