மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் சிறு குறு வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க வழி வகுக்கும் முத்ரா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார்.
முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு குறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளால் கடனுதவி வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 10ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 49 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளுக்கு, 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் 6 புள்ளி 67 கோடி கடன் கணக்குகளுக்கு 5.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடன் பெறப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்திலும், பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.