பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவது தமிழகம் மீதான ஆழ்ந்த அன்பை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விண்ணுலகில் சந்திராயன், ஆதித்யா போன்ற விண்கலங்களில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கியவர் பிரதமர் மோடி என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சுய சார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய மாபெரும் தலைவர் பிரதமர் மோடி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி, நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து, உலக அரங்கில் அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் பிறந்த நாள் புகழ்பெற்ற பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கட்டும் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.