பாடகர் மனோ மகன்கள் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோர் தலைமறைவான நிலையில், மனோவின் மகன்கள் தங்களை மதுபோதையில் தாக்கியதாக புகார் அளித்தவர்கள் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்களை ஒரு இளைஞர் விரட்டிச்சென்று தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, தன்னிடம் ஆதாரம் இல்லாததால்தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது உண்மை என்ன என்பதை புதிய வீடியோவில் அவைரும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் விசாரிக்காமல் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தமக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர், இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது மகன்கள் நேரில் வர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய மனோவின் மருமகள், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்தார்.
தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்றும், தனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டில் தனியாக இருப்பதால், தங்களின் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.