சேலத்தில் ஆன்லைனில் பழைய நாணயங்களுக்கு அதிக தொகை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் பேஸ்புக் கணக்குக்கு மிகப் பழமையான நாணயங்களை கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக விளம்பரம் வந்துள்ளது.
இதனை பார்த்த பழனிசாமி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, பழைய நாணயங்கள் 36 லட்சம் ரூபாய் வரை விலை போகும் என்றும், பதிவு கட்டணமாக ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என மர்மநபர் தெரிவித்துள்ளார்.
மேலும், 36 லட்சம் ரூபாய்க்கு வரியாக 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய நிலையில், பணம் ஏதும் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.