ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முதல் தவணை நிதியை அவர் விடுவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 26 லட்சம் வீடுகளில் கிரக பிரவேஷமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இங்கு வருவதற்கு முன் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் கிரக பிரவேஷத்துக்கு தாம் சென்றதாகவும், அப்போது பழங்குடியின பெண் தனக்கு அளித்த பாயசம் தனது தாயாரை நினைவுபடுத்தியதாகவும் அவர் உருக்கமுடன் பேசினார்.
தனது பிறந்த நாளையொட்டி தாயாரிடம் ஆசிர்வாதம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறிய பிரதமர் மோடி, நிகழாண்டில் அவரை இழந்தபோதிலும், பழங்குடியின தாய் தனக்கு பாயசம் கொடுத்து வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் தாம் பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்ததற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்த ஆங்கிலேயர்கள், விநாயகர் சதுர்த்தியால் ஆத்திரமடைந்தனர் என்றும், அதேபோல சமூகத்தைத் துண்டாட நினைப்பவர்களும் கணபதி பூஜையை பார்த்து கோபப்படுகின்றனர் என்றும் கூறினார்.