வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாயில் பொதுமக்கள் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று கடந்த 15 ஆம் தேதி வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டது.
இன்றைய நிலவரப்படி வைகை அணையின் பாசனக் கால்வாய் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 99 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.