குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் வில்மிங்டனில் நடைபெற இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார்.
நாளை முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதன்படி செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.