நாட்டிலேயே நேர்மையற்ற அதிக ஊழல் கறைபடிந்த கட்சி காங்கிரஸ் என, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அமையவுள்ள மத்திய அரசின் பிரமாண்ட ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியத்துக்கு வார்தாவில் இருந்தவாறு காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஆச்சார்யா சாணக்யா திறனறி மேம்பாட்டு மையத்தை அவர் திறந்து வைத்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாளில்தான் கடந்த 1932-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியதாக குறிப்பிட்டார். ஜவுளித்துறையில் இழந்துபோன ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையை மீட்டெடுப்பதே விஸ்வகர்மா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சூளுரைத்தார்.
விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் வரை எவ்வித உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கப்படுவதாகவும், ஓராண்டில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பின்னர், காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், நாட்டிலேயே நேர்மையற்ற, அதிக ஊழல் கறைபடிந்த கட்சி எதுவென்றால் அது காங்கிரஸ் தான் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
அதேபோல் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக கண்காட்சி அரங்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு பூரி ஜெகநாதர் சிலையை வாங்கினார். இதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.