தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அபபோது கட்சியில் புதிதாக இணைந்த பெண்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது :
நாடு முழுவதும் சாதி, மதம், வயது வேறுபாடு, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கும் கட்சி மற்றுன் பெண்களை மரியாதையாக நடத்தும் கட்சி என்பதால் பாஜக பெரிய கட்சி . அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்தவர்களும் பாஜகவில் உள்ளனர்.
மத்தியில் ஆட்சியில் உள்ளோம். தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைப்போம். அதற்கான வேலைகள் கட்சியில் கடந்த 5,6 வருடங்களாக பெரிய அளவில் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் ஒருதொகுதி கூட வெற்றி பெறவில்லையே என கூறுகின்றனர். அதிகாரத்தில் இருப்பதால் பாஜகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்க்கின்றனர்.
பிரதமர் மோடியோ, பாஜகவோ அதிகாரத்தில் இருந்துக் கொண்டு தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மகன், மகள், மருமகன் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படவில்லை. பாஜகவின் வளர்ச்சியைதான் பார்க்கிறோம். பாஜகவில் யார் வேண்டுமானாலும் பெரிய அளவில் வரலாம்.
மத்திய அமைச்சரவையில் எத்தனையோ துறைகள் இருந்தாலும் மீனவர்களுக்கென்று தனித்துறையை அமைத்தது பிரதமர் மோடிதான். அதன்மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களுக்கு அளித்து வருகிறோம்.
விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மீனவர்கள் முக்கியம் என்பதால் விவசாயிகளுக்கும் கிஷான் கடன் அட்டையை பிரதமர் வழங்கி உள்ளார். அதன்மூலம் மீனவர்களும் பலனடைந்து வருகிறோம். மீனவப் பெண்கள் சிறு சிறு குழுக்களாக தொழில்களை மேற்கொள்ள வேண்டும். அ
தற்குதான் பெண்களுக்காக வங்கிகளில் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் அரசின் உத்தரவாதத்தில் முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கப்படுகிறது. வங்கியில் முத்ரா திட்டத்தில் கடன் கிடைக்கவில்லை என்றால் என்னிடம் புகாரளிக்கலாம். எந்த வங்கி கடன் அளிக்கவில்லை என்பதை நான் பார்க்கிறேன்.
PM swanithi திட்டத்தில் தெருவோர வியாபாரிகள் வங்கி மூலம் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாம் அரசு மூலம் கடன் அளிக்கப்படுகிறது. கடல்பாசி சேகரித்து ஏற்றுமதி செய்வது போன்ற சிறுசிறு தொழில்களை மேற்கொள்ள அரசு கடன் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கடல் பொருட்கள் ஏற்றுமதி அதிகளவில் நடக்கிறது. ஆந்திராவில் இறால் ஏற்றுமதி அதிகளவில் நடக்கிறது. தமிழ்நாடு மீனவர்களும் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதியால் அந்நிய செலவாணி மூலம் அதிகளவில் பணம் கிடைக்கும்.
ஆழ்கடல்களில் டிராலர்கள் வைத்து மீன்பிடிப்பதால் அதிகளவில் வியாபாரம் பார்ப்பதாக கூறப்படுகிறது.உலக வர்த்தக சபையில் பெரிய பெரிய கப்பல்கள் வைத்திருப்பவர்களின் வியாபாரம் பெருகுவது குறித்து விவாதிக்கப்படும். ஆனால், இந்தியாவில் இருந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் இந்தியாவில் பாரம்பரிய மீனவர்கள் குறித்து எடுத்துக்கூறி பாரம்பரிய மீனவர்களுக்கு எவ்வித நஷ்டமும் வராமல் இருக்க உலக வர்த்தக மையத்தில் போராடி வருகிறோம்.
பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்கள் குறையாமல் இருக்க போராடி வருகிறோம்.
எதிர்கட்சிகள் ஏழை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம். பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பிரதமர் முயற்சிக்கிறார். அரசின் திட்டங்களை பயன்படுத்தி மீனவர்கள் முன்னேற வேண்டும் என நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.