21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்தத் துறையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சமநிலை தேவை எனக்கூறிய அவர், ஜனநாயக மதிப்புகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து உத்தரவாதத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும், திறமையும், ஜனநாயகமும் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளதாக என அவர் தெரிவித்தார்.
புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வட்டமேசை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வலுவான முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், ஏஐ மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்திய மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எண்ணுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.