இஸ்ரேல் மீது ஏவுவதற்குத் தயாராக இருந்த 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா ராக்கெட் ஏவுதளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொல்ல, 5,000 பேஜர்களுக்குள் வெடிபொருட்களை இஸ்ரேல் எப்படி வைத்தது ? என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 17,18 ஆம் தேதிகளில், லெபனானின் பல்வேறு பகுதிகளில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியதில் 32 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த அதிரடி தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஹிஸ்புல்லா தலைவர், ஹசன் நஸ்ரல்லாஹ், ஹிஸ்புல்லாவைக் கண்காணிக்க இஸ்ரேல் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடும் என்பதால், செல்போன்களைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் என்று தங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் பேஜரைப் பயன்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இதன் விளைவாக, ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, தகவல் தொடர்புக்கு பேஜர்களைப் பயன்படுத்த தொடங்கியது.
அப்போதே இஸ்ரேல், பேஜர்களை உருவாக்கும் போலி நிறுவனத்தை, ஹங்கேரியில் BAC கன்சல்டிங் என்ற பெயரில் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
லெபனானில் வெடித்த பேஜர்களை தைவான் நிறுவனமான கோல்ட் அப்போலோவிடம் இருந்து ஹிஸ்புல்லா வாங்கியுள்ளது. பேஜர்களைத் தங்கள் தயாரிக்கவில்லை என்றும், ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுக்குத் தங்கள் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமையை வழங்கியிருந்ததாகவும் கோல்டு அப்பல்லோ நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆனால், உண்மையில் அந்த 5000 பேஜர்களையும் ஹங்கேரியைச் சேர்ந்த BAC கன்சல்டிங் நிறுவனம் தயாரித்துள்ளது. சாதாரண வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றாலும், BAC நிறுவனத்தின் முக்கிய கவனம் எப்போதும் ஹிஸ்புல்லாவுக்காகத் தயாரிக்கும் பேஜர்களில் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, லெபனானுக்கு அனுப்பப்பட்ட பேஜர்களின் பேட்டரிகள் வெடிக்கும் வகையில் செறிவூட்டப்பட்டன.
2022ம் ஆண்டில் சிறிய எண்ணிக்கையில் லெபனானுக்கு பேஜர்கள் அனுப்பிய BAC கன்சல்டிங் நிறுவனத்துக்கு ஹிஸ்புல்லாவின் ஆர்டர்கள் அதிகரித்தன.
இஸ்ரேலிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை பயன்படுத்தினர். தேவைப்படும் போது, ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லாவினரை அழிக்க இஸ்ரேல் காத்திருந்தது.
பேஜர்களைச் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் கடந்த செவ்வாயன்று வழங்கப்பட்டன என்றும், குண்டுவெடிப்பைத் தூண்டுவதற்காக, அனைத்து ஹிஸ்புல்லா பேஜர்களுக்கும் அரபு மொழியில் ஒரு குறுஞ்செய்தியை இஸ்ரேல் இராணுவம் அனுப்பியது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவப்புக் கோட்டை இஸ்ரேல் தாண்டி விட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளதும், ஹமாஸுக்கு எதிரான போரில் புதிய கட்டம் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவ அமைச்சர் Yoav Gallant கூறியிருப்பதும் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா மோதல் ஒரு முழுப் போராக மாறும் என எதிர்பார்க்க படுகிறது.
பேஜர் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுவதற்குத் தயாராக ஹிஸ்புல்லா வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதளங்களை இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி அழித்தது.
ஏற்கெனவே, கடந்தாண்டு மத்திய கிழக்கில் நேச நாடுகளை பாதுகாப்பதற்கும் ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் தாக்குதல்களை தடுப்பதற்கும் அமெரிக்கா சுமார் 40,000 வீரர்கள், 12க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நான்கு விமானப்படை போர் விமானப் படைப்பிரிவுகள் என தனது ராணுவத்தை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள், இஸ்ரேலை பாதுகாப்பது மற்றும் ஏமனில் வர்த்தக கப்பல்களைக் குறிவைத்து தாக்கும் ஈரான் ஆதரவு ஹூதி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, அமெரிக்கா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஓமன் வளைகுடாவில், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதன் மூன்று நாசகார கப்பல்கள், செங்கடலில் இரண்டு அமெரிக்க கடற்படை நாசகார கப்பல்கள் மற்றும் USS Georgia வழிகாட்டும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் என கிழக்கு மத்தியதரைக் கடலில் ஆறு அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காசா போர் தொடங்கிய பிறகு , லெபனானில் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலைத் தொடங்கி உள்ளது. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.