செஸ் ஒலிம்பியாட் ஆடவர் மற்றும் மகளிர் அணியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹங்கேரி நாட்டு தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜான் அணியையும் வீழ்த்தியதன் மூலம் இரண்டு தங்கம் பதக்கம் கிடைத்தது. இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் ஆடவர் அணியில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவும், மகளிர் அணியில் பங்கேற்ற வைஷாலியும் நாடு திரும்பி உள்ளனர். சென்னை வந்தடைந்த இருவருக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவு என இரு அணிகளும் தங்கப் பதக்கம் வென்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.