தேனியை சேர்ந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மகளின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த தந்தை, தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே மாணவியை காரில் கடத்திய மர்ம நபர்கள், தேனி பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி ரயில்வே நிலைய போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.