மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அக்ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அக்ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின்பேரில், அவரை விசாரிக்க தலோஜா சிறையிலிருந்து பத்லாபூருக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.
மும்பை அருகே வந்தபோது திடீரென அவர், காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் சஞ்சய் சுட்டதில் அக்ஷய் ஷிண்டே படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி குற்றவாளி சுட்டதால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததால் பத்லாபூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
குற்றவாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் இண்டியா கூட்டணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேச தகுதியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற இண்டியா கூட்டணி முயன்றதாக சாடியுள்ள அவர், மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.