அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக DELAWARE மாகாணம் WILMINGTON-ல் உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இல்லத்துக்கு பிரதமர் சென்றார். அவரை ஆரத்தழுவி வரவேற்றார் ஜோ பைடன். இருவரும் சுமார் ஒரு நேரம் உரையாடினர்.
இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்றாலும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளை பைடன் பாராட்டினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக தாம் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மோடி – பைடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மிக முக்கியமான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாடுகளுக்கான புதிய செமி கண்டக்டர் ஆலையை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அமைக்க உள்ளன என்பதே அந்த அறிவிப்பு.
BHARAT SEMI CONDUCTORS, 3rd i Tech, US SPACE FORCE ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்ளவுள்ளன. தேசிய பாதுகாப்புக்காக அமைக்கப்படும் முதல் பல்பொருள் ஆலையான இதற்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. INFRARED, GALLIUM NITRIDE மற்றும் SILICON SEMICONDUCTOR-கள் சக்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் ஆலையை தவிர வேறு சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் மோடியும் பைடனும் விவாதித்தனர். அடுத்தாண்டு நாசாவுடன் இணைந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டது.
அமெரிக்காவின் சிறிய ரக ட்ரோனான ‘MQ-9B’-ஐ வாங்குவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 31 ‘MQ-9B’ ட்ரோன்கள் இந்திய ராணுவத்துக்காக வாங்கப்படுகின்றன.
பயணிகள் விமானத்தைவிட அதிக உயரத்தில் பறக்கும் ‘MQ-9B’, தொடர்ந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் திறன் கொண்டது. அதே போல் தொடர்ச்சியாக 35 மணி நேரம் பறக்கக் கூடியது. நிலத்தில் இருந்து 50 ஆயிரம் அடி உயரத்தில், அதிகபட்சமாக மணிக்கு 442 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க வல்லது. பூமியில் இருந்து 800 அடி உயரத்தில் பறந்தால்கூட ‘MQ-9B’ ட்ரோனை கண்டுபிடிக்க முடியாது. எவ்விதமான தட்பவெப்ப நிலையிலும் சத்தமின்றி இயங்கக்கூடியது. 4 ஏவுகணைகள் மற்றும் 450 கிலோ வெடிபொருட்களை கொண்டு செல்லும் திறன் பெற்றது.
இந்த சந்திப்பின் போது வெள்ளியால் செய்யப்பட்ட ரயில் பெட்டி சிற்பத்தை பைடனுக்கு பரிசாக வழங்கினார் மோடி. மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அந்த சிற்பம் நீராவி என்ஜினை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பக்கவாட்டில் ‘இந்தியன் ரயில்வே’ என்றும், DELHI – DELAWARE என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபரின் இல்லத்துக்கு செல்வதற்கு முன்பாக DELAWARE மாகாணத்தில் நடைபெற்ற ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அதை குறிக்கும் வகையில் ரயில்பெட்டி சிற்பத்தில் DELHI – DELAWARE என பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு, ஜம்மு – காஷ்மீரில் நெய்யப்பட்ட உலக பிரசித்த பெற்ற பாஷ்மினா சால்வையை பிரதமர் பரிசளித்தார்.
முன்னதாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தோ – பசிபிக் வளர்ச்சியே தங்களது நோக்கம் என்றும், ‘குவாட்’ அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும் கூறினார். மேலும் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான சிறப்பு திட்டத்துக்கு 7 புள்ளி 5 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
‘குவாட்’ உச்சி மாநாடு மற்றும் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பிறகு நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மத்தியில் மோடி உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டின் வலுவான தூதுவர்கள் என்றார். இந்தியர்கள் பல்வேறு மொழி மற்றும் மத நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். இந்தியா பேசினால் உலகம் கவனிக்கும் என்றும், தெற்கின் வலுவான குரலாக நம் நாடு இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், உலக அளவிலான டெக்னாலஜி ஜாம்பவான்களுடன் இந்தியாவின் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் C.E.O.-களுடன் வட்ட மேசை உரையாடலில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் கூகுள் C.E.O. சுந்தர் பிச்சை, IBM C.E.O. அரவிந்த் கிருஷ்ணா, ADOBE C.E.O. சாந்தனு நாராயன், NVIDIA C.E.O. JENSEN HUANG, AMD C.E.O. LISA SU உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கலந்துரையாடலின் போது அமெரிக்க – இந்திய C.E.O.-களை பெருமைப்படுத்தும் விதமாக “AI என்றால் ARTIFICIAL INTELLIGENCE என்று பொருள், ஆனால் தம்மை பொறுத்தவரை AI என்றால் AMERICAN INDIAN” என பிரதமர் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த கூகுள் C.E.O. சுந்தர் பிச்சை, பெரு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். AI தொழில்நுட்பம் எத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய தெளிவு மோடிக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். மொத்தத்தில் பிரதமரின் அமெரிக்க பயணம் பல்வேறு வகைகளில் இந்தியாவுக்கு பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.